இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு எல்லாரும் இப்படி பேசுறீங்க… கடுப்பான காம்பீர்
தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்த அணி கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரரான காம்பீர் இந்திய அணிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
தென் ஆப்ரிக்கா அணியுடனான தோல்விக்கு பிறகு இந்திய அணி கடுமையான விமர்ச்சனங்களை சந்தித்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என்ற பலரும் இந்திய அணியை கடுமையாக சாடி வரும் நிலையில், இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சீனியர் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் சீனியர் வீரர் கவுதம் காம்பீர் “இந்திய கிரிக்கெட் அணிக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டிய நேரம் இது தான். ஒரு தொடரை இழந்துவிட்டதால் இந்திய அணியை சாடிப்பேசுவது சரியான முறை அல்ல. தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடரை வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணிக்கும் தனது வாழ்த்தையும் காம்பீர் தெரிவித்துள்ளார்.