டெல்லி கிரிக்கெட் சங்கம் பல தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டது ஆனால் இதுவே ஒரு உந்து விசையாகி டெல்லி அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி இறுதிப் போட்டியில் நுழையக் காரணமானது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீர் இந்த சீசனில் டெல்லி அணிக்காக அதிக ரன்களைக் குவித்ததோடு டாப் 10 பட்டியலிலும் உள்ளார். இந்த சீசனில் கம்பீரின் சராசரி 63.20.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் கம்பீர் கூறியதாவது:

டெல்லி கிரிக்கெட் சங்கம் பல தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டு வந்தது. என்னுடன் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என்று அனைவரையும் இது பாதிக்கவே செய்தது. ஆனால் மோசமான விஷயமே சில வேளைகளில் நல்லது செய்து விடுகிறது, அதாவது நம்மைப் பற்றி, அணியைப் பற்றி வரும் தவறான செய்திகளே நமக்கு உந்துவிசையாக அமைந்து விடுகிறது. நாம் எதனால் காயமடைகிறோமோ அதுவே நம்மை முடுக்கி விடும் விசையாகி விடுகிறது.

எனக்கும் பயிற்சியாளருக்கும் இடையே சர்ச்சை பற்றி நிறைய செய்திகள் வந்தாகிவிட்டது. இது பல விரிவுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தத் தொடரில் வெற்றி பெறுவதே இதனை ஒழிக்க முடியும் என்ற மனநிலையை ஏற்படுத்தியது. டெல்லி அணி ஓய்வறையில் எதிர்மறை விஷயங்கள் மட்டுமே உள்ளன என்பதை முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடனபாடான தருணங்களும் உண்டு, டெல்லி அணியின் இழந்த மதிப்பை மீட்டெடுக்க உதவியது.
எந்த வடிவத்தில் ஆடினாலும் அணி போன்றே கேப்டனும் சிறந்தவராகவே இருக்க வேண்டும். ரிஷப் பந்த் கற்றுக் கொண்டிருக்கிறார், வீரராகவும் கேப்டனாகவும் பரிணாமம் அடைய அவரிடம் அவா உள்ளது. ரிஷப் உத்திகளை வகுக்கக் கூடியவர். ஆனாலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை எனில் அனைத்துத் திட்டங்களும் விமர்சனத்துக்குள்ளாகும்.

எனவே இளம் கேப்டனா, அனுபவ கேப்டனா என்பதல்ல விஷயம். குறிக்கோளை அடையும் அவா இருந்தால் போதுமானது, இந்த மனநிலைதான் விளையாட்டு வீரன் வெற்றி பெற முடியும். இந்த மனநிலையை ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர் தலைமை ஆஸ்திரேலிய அணியிடம் பார்க்கலாம். யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்கினாலும் என்ன தேவையோ அதனை அங்கே நிறைவேற்றுவார்கள்.
2007-ல் என்ன சாதித்தோமோ அதனை அடைய இன்னும் ஒரு போட்டி உள்ளது.
எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் பேட்ஸ்மென்கள் களத்தை அமைத்துக் கொடுக்கின்றனர், ஆனால் பவுலர்கள்தான் போட்டிகளை வென்று கொடுக்கின்றனர்.
இவ்வாறு கூறினார் கம்பீர்.