தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 6 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டர்பனில் இன்று நடக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் தொடருக்கு நல்ல அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதல் 3 போட்டியில் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக ஆடவில்லை. இதுவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற சிறந்த வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.
ஒருநாள் தொடருக்கு சிறந்த வீரர்கள் 11 பேர் கொண்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ரகானே சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் ஒருநாள் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் அவரை தொடக்க வீரர் வரிசையில் வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல மற்றொரு முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வெல்லும் என்று தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் கங்குலி கூறும்போது, இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.