ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் தோனி குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:
ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.
அடுத்து நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.
ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்.
2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் 5 அல்லது 6-வது வரிசையில் களமிறங்குவது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரின் பேட்டிங் இடம் எது என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும். டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை இன்னும் நாம் பட்டை தீட்ட வேண்டும். அவரின் தவறுகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக்கொள்வார்’’.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.