தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியான்டட் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 119 பந்தில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் சேர்த்தார். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 50 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப் டவுனில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 159 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
3 போட்டியில் 321 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியை, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியான்டட் புகழ்ந்துள்ளார்.
விராட் கோலி குறித்து மியான்டட் கூறுகையில் ‘‘விராட் கோலியின் பேட்டிங் முறை, அவரை ஒருமுறை மட்டுமே ரன் குவிக்க வைக்கவில்லை. அவர் பேட்டிங் செய்யும்போதெல்லாம் ரன் குவிக்க வைக்கிறது. ஒரு பேட்ஸ்மேனின் டெக்னிக் மோசமாக இருந்தால், அவரால் ஒரு முறைதான் ரன்கள் குவிக்க இயலும். ஆனால் விராட் கோலி அப்படியல்ல, தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருகிறார்.
பந்து வீச்சாளர்களின் வலிமை மற்றும் குறைபாட்டை உடனடியாக புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி விராட் கோலியால் ஆட்டத்தின் டெக்னிக்கை மாற்றிக் கொள்ள முடிகிறது. இதுதான் என்னை ஈர்த்தது. விராட் கோலி ஒரு மேதை. அத்துடன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்’’ என்றார்.