மேற்கு இந்திய அணிகளுக்கு எதிராக உள்நாட்டு டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.மேலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஷிகர் தவண் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்படி என்னதான் மற்றவர்களிடம் இல்லாத திறமை இருக்கிறது ரிஷப் பந்திடம்? ஜிம்னாஸ்டிக் திறமையா, புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலா? கண்டிப்பாக அவர் ஒரு விக்கெட் கீப்பர் இல்லை என்பது கல்லி கிரிக்கெட் ஆடுபவர்களுக்குக் கூட தெரியும்போது, கீப்பர்தான் பந்துவீச்சாளர்களின் தன்னம்பிக்கை என்பது விக்கெட் கீப்பரான தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்துக்கு தெரியவில்லையா. விருதிமான் சாஹாவின் மீள்வருகைக்கு பிறகு நமது டெஸ்ட் அணியின் செயல்பாட்டை பார்த்தும் எப்படி தெரியாமல் இருக்கும்.
ரிஷப் பந்த் முதல் ஸ்லிப்பிற்கு நேராக செல்லும் பந்தை பிடிக்க புல் லெந்த் டைவ் அடித்து கையுறையில் எட்ஜ் வாங்குவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பந்து வருவதை கணித்து சிறிய கால் நகர்த்தலில் எளிதாக மற்ற கீப்பர்கள் பிடிக்கக்கூடிய பந்துகளுக்குத்தான் இவ்வளவு சிரமப்படுகிறார். அதைச் சுட்டி காட்டுவதற்கு பதிலாக கில்கிறிஸ்ட் போல டைவ் அடிக்கக்கூடிய கீப்பர் கிடைத்து விட்டார் என்று இனியும் கொண்டாடிக் கொண்டிருந்தால் டிஆர்எஸ் என ஒன்று இருப்பதை நாம் மறந்துவிட்டு ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில் கடந்த போட்டிகளில் அணியில் இடம்பெற்றிருந்தும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்காத நிலையில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளிப்படுத்தினார்.
அணியில் இடம்பெறாத ஏமாற்றத்தை சஞ்சு சாம்சன் வார்த்தைகளால் விவரிக்கவில்லை. அதற்கு மாறாக புன்னகைக்கும் ஸ்மைலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
I guess they r testing his heart ? #selectionpanelneedtobechanged need strong people there.. hope dada @SGanguly99 will do the needful https://t.co/RJiGVqp7nk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 25, 2019
இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனின் ட்வீட்டின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவர் பதிவுக்குக் கீழே, ”தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்”, ”நம்பிக்கையுடன் இருங்கள் சஞ்சு சாம்சன். நீங்கள் அணியில் நிச்சயம் இடம்பெறுவீர்கள்” என்று அவருக்கு ஆதரவான பதிவுகளைப் பதிவிட்டனர்.
மேலும், இந்திய அணியின் தேர்வுக் குழுவையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.