சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டி தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வதற்கு சென்னை வந்துள்ளார்.
அதனை தனக்கே உரிய ஸ்டைலில் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். சிஎஸ்கே அணியினர் மார்ச் 2 ஆம் தேதி முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே கேப்டன் தோனி மார்ச் 1 ஆம் தேதி இரவே சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி சார்பில் தற்போது தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், கரன் தர்மா, தீபக் சாஹர் ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி தினமும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சிஎஸ்கே நிர்வாகத்தினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே பயிற்சியின் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தான் சென்னை வந்துள்ளதை ரசிகர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார், அதில் ” வந்து இறங்கியிருக்குற இடம் சென்னை. இந்த ஐபிஎல் நம்ம டீம் செம “வலிமை” மாப்பி. தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல. அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செய்கை வேற ரகமா இருக்கபோது. சேப்பாக் நம் “தலைவன்இருக்கிறான்” மயங்காதே” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் அஜித், விஜய், ரஜினி, கமல் நடிக்கும் படங்களை தெரிவித்து ட்வீட்டாக்கியிருக்கிறார் ஹர்பஜன்.
வந்து இறங்கியிருக்குற இடம் @ChennaiIPL.இந்த @IPL நம்ம டீம் செம #வலிமை மாப்பி.#தளபதி ஸ்டைல் ல #தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல.#அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செயக்கை வேற ரகமா இருக்கபோது.சேபாக் நம் #தலைவன்இருக்கிறான் மயங்காதே #WhistlePodu #CSK pic.twitter.com/FQXJoBSw65
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 9, 2020
ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் திருவிழாவாக அமையும் ஐபிஎல் தொடர், தோனி ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாடமாக அமையவுள்ளது. ஏனென்றால் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி நேராக ஐபிஎல் போட்டியில் மட்டுமே களமிறங்குகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் ‘மரண வைட்டிங்’கில் உள்ளனர்.
அதேசமயம் தோனி ஹேட்டர்கள் அவரை கிண்டல் செய்ய தவறவில்லை. வயதாகிவிட்டது, ஃபார்மில் இல்லை, அதிரடியாக பேட்டிங் செய்யமாட்டார் என பல்வேறு விமர்சனங்களை தோனி மீது வைத்துக்கொண்டே இருக்கின்றனர். அத்துடன் பல மீம்ஸ்களை தோனிக்கு எதிராக பதிவு செய்கின்றனர். இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் தற்போது ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.