துணை கேப்டன் மற்றும் கேப்டன் பொறுப்புகளில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டு, இப்போதுதான் பொறுப்புடன் விளையாடுகிறார் என கருத்து தெரிவித்திருக்கிறார் சபா கரீம்.
ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி 215 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டியது.
216 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் எதிர்பார்த்தவாறு இல்லை. விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பொறுப்புடன் விளையாடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
வழக்கமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹர்திக் பாண்டியா சமீபகாலமாக இது போன்ற குறைந்த ஸ்கோர் போட்டிகளில் நிதானமாக விளையாடி வெற்றிக்கு உதவுகிறார். குறிப்பாக டி20 கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்து இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது என பெருமிதமாக பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம். அவர் பேசியதாவது:
“இந்தியா போன்ற அணிக்கு கேப்டன் அல்லது துணை கேப்டன் பொறுப்பில் இருக்கும் பொழுது போட்டியை வேறு விதமாகவும் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் கவனிக்க வேண்டும். அணுக வேண்டும். அதேபோல் உங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மற்றும் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீரராக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார் முன்பைவிட கேப்டன் பொறுப்பேற்ற பிறகு மைதானத்தின் கண்டிஷன் அறிந்து பேட்டிங் செய்கிறார்.
முன்பு அவரது பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஒரு நிதானம் கிடையாது. கேப்டன பொறுப்பேற்று பிறகு தான் கூடுதல் பொறுப்புடன் விளையாடுகிறார். இதுபோன்ற குறைந்த இலக்கு இருக்கும் போட்டிகளில் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டாமல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் விளையாட வேண்டும். அணியின் துணை கேப்டனாக இருக்கும் அவர் அந்த ரோலை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்று தெரிகிறது. கே.எல். ராகுலுடன் இணைந்து ஒரு விளையாடிய விதம் நல்ல முதிர்ச்சியை காட்டியது. கட்டாயம் வருகிற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து முக்கிய வீரராகவும் இருப்பார்.
டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க சரிவருவார். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு எப்படி துணைக் கேப்டனாக இருப்பதற்கு சரியான வீரராக இருப்பார்? என்று நினைத்தேன். எனது கருத்தை தவறு என உணரவைத்து, அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வருவதற்கும் அத்தனை தகுதிகளும் இவருக்கு இருப்பதாகவே நான் உணர்கிறேன்.” என்றார்