தோனி என்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா, அதற்குள் என் கணவரைப் பற்றி இந்த கேள்வி கேட்கிறீர்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் அகமது மனைவி குஷ்பாத் சர்பிராஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், டி20 அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் ஆசம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடருக்கு முறையே கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பிராஸ் அகமது இடம் பெறவில்லை, ஒட்டுமொத்தமாக புறந்தள்ளப்பட்டார். ஏறக்குறைய பாகிஸ்தான் அணிக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக இருந்த சர்பிராஸ் அகமதுவை திடீரென அணியிலிருந்தே மொத்தமாகக் கழற்றிவிட்டது முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.
இதற்கிடையே 32 வயதாகும் சர்பிராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சர்பிராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அகமதுவிடம் நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தோனியோடு ஒப்பிட்டு காட்டமாகப் பதில் அளித்தார். அவர் கூறுகையில், ” என் கணவர் சர்பிராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது.
இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா. இப்போது தோனிக்கும் ஆகும் வயதில் இன்னும் விளையாடி வருகிறார்தானே, அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா. என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். எனது கணவர் ஒரு போராளி, மீண்டும் திரும்பி வருவார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கணவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால், அவர் மனவேதனை அடையவில்லை, நம்பிக்கை இழந்துவிடவில்லை. பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.
இந்த முடிவைநாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம். இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும், அழுத்தமும் இன்றி விளையாடுவார் ” எனத் தெரிவித்துள்ளார்
சர்பிராஸ் அகமதுவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தவறு என்று அவருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் மோசின் கான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.வ்