நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா ஒருவழியாக தனது 8,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார்.
ஆப்கானுக்கு எதிராக கிரிக்கெட் மறதியில் ஆடிய ஆம்லா இந்தப் போட்டியில் சிலபல அடிக்க வேண்டிய பந்துகளை பயன்படுத்தி 4 பவுண்டரிகளுடன் 83 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சாண்ட்னர் வீசிய நல்ல பந்தை லேசாக லெக் ஸ்டம்பிலிருந்து ஆங்கிள் பேட்டுடன் பாயிண்டில் தட்டி விட முயன்று பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆகி வெளியேறினார்.
இதில் 176 வது தன் இன்னிங்சில் அவர் 8000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தார். விராட் கோலிதான் அதிவிரைவு 8000 ரன்கள் சாதனையில் முதலிடம் அவர் 175 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார், ஆம்லா 2வது இடம்.
மேலும் ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோருக்கு பிறகு 4வது தென் ஆப்பிரிக்க வீரராக ஆம்லா 8000 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பவுன்சரில் அடி வாங்கிய ஆம்லா 2வது போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவை 241 ரன்களுக்கு மட்டுப்படுத்திய நியூஸிலாந்து:
டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஒரு மாதிரியான ‘ஸ்பாஞ்ச்’ மாதிரியான டென்னிஸ் பந்து பிட்சில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். ட்ரெண்ட் போல்ட் மிக அருமையாக டி காக்கின் கால் நகராத தன்மையை யூகித்து தொடர்ந்த இன்ஸ்விங்கரில் ஆன் ட்ரைவ் ஆசையைத் தூண்டி பவுல்டு செய்தார், ஸ்டம்ப் நடந்து சென்றது.
ஹஷிம் ஆம்லா மீண்டும் தன் சரளத்தைத் தொலைத்து விட்டு ஆடினார், ஆனால் மிக பயனுள்ள ஒரு 55 ரன்களை 83 பந்துகளில் எடுத்தார். இதன் மூலம் 8000 ரன்களை விரைவில் கடந்த 2வது வீரர் ஆனார், இதுதான் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல்.

ஆம்லா ஒரு அரைசதக் கூட்டணியை தன் கேப்டன் டுப்ளெசிஸுடன் (23) பகிர்ந்து கொண்டார். பிறகு அய்டன் மார்க்ரம் (38) உடன் இன்னொரு அரைசதக் கூட்டணியைப் பகிர்ந்து கொண்டார் ஆம்லா. இவையெல்லாம் இன்னும் எழும்பி சதக்கூட்டணியாக மாறியிருக்க வேண்டும். ஆனால் ஆம்லாவை சாண்டர் வீட்டுக்கு அனுப்ப டுபிளெசிஸை 148 கிமீ வேக யார்க்கரில் பெர்கூசன் காலி செய்ய மார்க்ரம் டீப் கவரில் கேட்ச் ஆகி கொலின் டி கிராண்ட் ஹோமிடம் வெளியேற 136/4 என்று ஆனது.
வான் டெர் டியூசன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து 72 ரன்களை 5வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். டியூசன் 12 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுக்காக 6வது அரைசதம் கண்டார். பெர்கூசன் வீசிய 49வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டியூசன் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 15 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 241/6 என்று முடிந்தது. பெர்கூசன் 3 விக்கெட்டுகளையும் போல்ட், கிராண்ட் ஹோம், சாண்ட்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.