இந்திய அணி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரர் இவர் தான் என பேட்டி அளித்திருக்கிறார் ரோகித் சர்மா.
திருவனந்தபுரம் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்துவிட்டு ஆட்டமிழந்துவிட்டார். அந்த துவக்கத்தை கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த கில், 97 பந்துகளில் 116 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபரமாக விளையாடி வந்த விராட் கோலி 46வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பிறகு விராட் கோலி-யின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 110 பந்துகளில் 166 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் மற்றும் சமி இருவரும் அச்சுறுத்தலாக இருந்தனர். இதில் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார்.
சிராஜ் நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஒரு ரன் அவுட் என பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு இலங்கை அணியை 73 ரன்களுக்குள் சுருட்டுவதற்கு மிக முக்கிய பங்காற்றினார். சமி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா, பந்துவீச்சில் அசத்திய முகமது சிராஜ் பற்றி புகழ்ந்து பேசினார். அவர் கூறியதாவது:
“முகமது சிராஜ் இடம் தனித்துவமான திறமை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தன்னை நன்றாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போன்று ஆக்ரோஷமாகவும் நேர்த்தியாகவும் பந்து வீசக்கூடிய வீரர். சிராஜ் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று இறுதிவரை போராடினார். எதிர்பார்த்தவாறு அமையவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் நான்கு விக்கெட்டுகள் எடுத்தது அபாரமானது. விரைவில் 5 விக்கெட்டுகள் வந்துவிடும், அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. வரும் போட்டிகளில் அதையும் நாம் காணப் போகிறோம்.” என்றார்.