நடப்பு ஆஷஸ் தொடரில் தனது குறைந்த ஸ்கோரான 80 ரன்களை ஓவல் டெஸ்ட் போட்டியில் எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித், இந்தத் தொடரில் மட்டும் அவர் 700 ரன்களைக் கடந்து விட்டார்.
ஒவ்வொரு முறையும் அவர் ஆஸ்திரேலிய அணியை இந்தத் தொடரில் காப்பாற்றியுள்ளார் ஸ்மித், நேற்றும் ஓவல் டெஸ்ட் போட்டியில் தனிநபராக 80 ரன்களை எடுத்து அணியை மீட்டார் ஆனால் இம்முறை முதல் டெஸ்ட் போட்டி போல் முன்னிலை பெற்றுத் தரமுடியவில்லை.
80 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் பீட்டன் ஆகி எல்.பி.ஆகி வெளியேறினார்.
ஜோப்ரா ஆர்ச்சர் ஸ்மித்துக்கு நன்றாக வீசினாலும் அவரை சொற்ப ரன்களில் வீழ்த்த முடியவில்லை, காரணம் ஜோ ரூட்டின் கற்பனை வளமற்ற கேப்டன்சியே.

அவரை அதிகமாகப் பயன்படுத்தினார் ஜோ ரூட். ஸ்ட்ரைக் பவுலர்களை பயன்படுத்தும் விதம் பற்றி ஜோ ரூட், மைக்கேல் கிளார்க் பள்ளியில் டியூஷன் செல்வதுதான் முறை. அடிக்கடி ஒரு ஸ்ட்ரைக் பவுலரைக் கொண்டு வந்து கொண்டிருந்தால் அவர் ஸ்ட்ரைக் பவுலர் என்ற தகுதியை விரைவில் இழந்து விடுவார் என்பது அடிப்படை கேப்டன்சி பாடமாகும்.
இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் கூறியதாவது:
எப்படியும் ஒரு பந்தை மிஸ் செய்வார் என்பது தெரிந்ததுதான் இந்த முறை கிறிஸ் வோக்ஸ் பந்தை விட்டார். ஒவ்வொரு முறை அவர் பேட் செய்யும் போதும் அவர் ஆட்டமிழக்க மறுக்கிறார், இது ஒரு பெரிய விந்தைதான்.
ஒட்டுமொத்தத் தொடரிலும் அவர் மோசமான ஷாட் ஆடும்போதெல்லாம் பீல்டர்கள் இல்லாத பகுதியில் பந்து காற்றில் சென்று விழுகிறது, இது எப்படி? ஆச்சரியமாக உள்ளது.
அவர் சிறந்த பேட்ஸ்மென், சிறந்த பொறுமைசாலி எல்லாம்சரி, ஆனால் ஒவ்வொரு முறையும் பீல்டர்கள் கைக்குப் பந்து செல்லாமல் நழுவுகிறதே இது எப்படி?
ஆனால் இந்த ஓவல் இன்னிங்சில் ஸ்மித் ஸ்மித்தாக இல்லை. வழக்கமான ஆட்டமாக இது இல்லை.
இவ்வாறு கூறினார் ஆர்ச்சர்.