இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழந்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.
இவரது ஆரம்ப காலம் மிகவும் சோகமானது. பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இவர் முதன்முறையாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் வசந்த காலம் வீச தொடங்கியது. அந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை மும்பை வென்றதால் 70 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தற்போது அதிக அளவில் சம்பாதிக்கிறார்.
சமீபத்தில் இவர் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பொருாளாதார நெருக்கடியால் தவணைத்தொகை கட்ட முடியாமல் காரை இரண்டு வருடங்கள் மறைத்துவைத்தோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா மேலும் கூறுகையில் ‘‘நான் மூன்று வருடங்களாக திண்டாடினேன். நாங்கள் ஐந்து ரூபாய், 10 ரூபாய் என சேமித்தோம். நான் இன்னும் ஐ.பி.எல். தொடரை நினைத்து பார்க்கையில், நான் 70 ஆயிரம் ரூபாய் பெற்றேன். இதன்மூலம் சில நாட்கள் சமாளிக்க முடியும் என்று நினைத்தோம்.
ஏனென்றால் நாங்கள் மூன்று ஆண்டுகளாக பொருளாதார அடிப்படையில் தவித்து வந்தோம். காருக்கான தவணைத் தொகையை இரண்டு வருடங்களாக கட்டவில்லை. நாங்கள் திறமையாக அந்த காரை மறைத்து வைத்தோம். அந்த காரை கொடுக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் சம்பாதித்ததே அந்த காரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். புதிதாக ஏதாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அந்த நேரத்தில் பிரச்சினையில்லாமல் சாப்பிடவேண்டும். காருக்கு தவணை கட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றபின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. கடவுள் கருணை காட்டினார். என்னுடைய முதல் வருடத்திலேயே மும்பை அணி கோப்பையை வென்றது. அதன்பிறகு எனக்கு 50 லட்சம் ரூபாய் செக் கிடைத்தது. போட்டியின் மூலம் இலவசமாக கார் கிடைத்தது. புதிதாக கார் வாங்கினேன். மூன்று மாதத்திற்கு முன்புவரை பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். அதன்பின்னர் மூன்று மாதங்களுக்குள் 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை இருந்தது.’’ என்றார்.