மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்ற 19 வயது ஆப்கான் புதிர் ஸ்பின்னர் ரஷீத் கான் அதற்கு முந்தைய போட்டிகளில் விளாசப்பட்டார். 8 ஓவர்களில் 104 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அணியில் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலரும் கிளப்ப ரஷீத் கான் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மீண்டும் உயிர் பெற்றார். அதுவும் லெக் ஸ்பின்னர்களை புரட்டி எடுக்கும் திறனுடைய ஹர்திக் பாண்டியாவுக்கு 17வது ஓவரை மெய்டனாக வீசியது இன்று கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா இருவரும் ரஷீத் கானுக்கு சாத்துமுறை வழங்கியதற்குக் காரணம் பிளாட்டாக ஃபுல்லாக வீசினார் ரஷித் கான்.
வலது கை வீரர்களை ஆட்டிப்படைக்கும் ரஷீத் கான் இடது கை வீரர்களான கெய்ல், ரெய்னாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். கெய்ல் 6 சிக்சர்களை இவரை மட்டுமே அடிக்க ரெய்னாவோ 9 பந்துகளில் 24 ரன்களை ரஷீத்திடம் எடுத்தார்.
இந்நிலையில் சற்றே பேக் ஆஃப் லெந்த்தில் வீசினால் தன்னை அடிக்க முடியவில்லை, பேட்ஸ்மென்கள் திணறுகின்றனர் என்பதை உடனடியாக அவர் புரிந்து கொண்டு மாற்றிக் கொண்டுள்ளதை அவரே தெரிவிக்கும் போது, “நம் பந்துகளை அடித்து நொறுக்கும்போதுதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்.
நான் கடைசி 2 போட்டிகளில் கொஞ்சம் ஃபுல் லெந்தில் வீசினேன். அதனால் ரன்கள் கொடுத்தேன். அதனால் கொஞ்சம் லெந்த்தை ஷார்ட் செய்து வீச முடிவெடுத்தேன். அது கைகொடுத்தது.
எந்த பேட்ஸ்மெனாக இருந்தாலும் நாம் வீசும் லைன் மற்றும் லெந்த் முக்கியம். ஹர்திக் பாண்டியாவுக்கு எங்கு வீச வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருந்தது. அவருக்கு ஃபுல் லெந்தில் வீசக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
அவர் ஒரு வலுவான ஹிட்டர், எந்த ஒரு பவுண்டரியையும் அவர் சுலபமாகத் தாண்டி அடிக்கக் கூடியவர். அதனால்தான் பேக் ஆஃப் லெந்தில் வீசினாலும் அவர் மட்டையைத்தூக்கி அடிக்க இடம் கொடுக்காமலும் புல் லெந்தில் வீசாமலும் இருக்க முடிவெடுத்தேன்.
அடிப்படைகளை ஒழுங்காகச் செய்தேன். நான் என்ன செய்தேனோ அதற்கு என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன், மெய்டன் ஓவராக்கினேன்” என்றார்.