சஞ்சு சாம்சன், மொகமத் ஷமி, அம்பாத்தி ராயுடு ஆகியோர் சர்ச்சைக்குரிய யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் போயுள்ளது கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
ஏன் அணித்தேர்வு செய்து விட்டு பிறகு யோ யோ டெஸ்ட் நடத்த வேண்டும், யோ யோ டெஸ்ட் வைத்து விட்டு அணித்தேர்வு செய்ய வேண்டியதுதானே என்ற கேள்வி எழுந்துள்ளது, இப்போது யோ யோ டெஸ்ட் விரும்பத்தகாதவர்களை ஒழிப்பதற்கான நடைமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது இந்திய அணியின் செல்லப்பிள்ளை ரோஹித் சர்மா அதில் தோல்வியடைந்தால் அணியிலிருந்து நீக்கப்படுவாரா? என்பதே கேள்வி, அப்படி நீக்கப்பட்டால் அது நியாயம் என்று வாதிடுவது தவறு, அவரைப்போன்ற ஒரு பேட்ஸ்மெனை இழக்கும் யோ-யோ டெஸ்ட்தான் கேலிக்கூத்தான ஒரு டெஸ்ட் என்ற கருத்துகள் பரவலாகிவருகின்றன.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கச் செயலர் டி.ஷ்ரேயஸ் நாராயண், அம்பாத்தி ராயுடு இழந்த இடத்திற்காக வருந்திப் பேசிய போது, “இந்த யோ-யோ விவகாரம் மிகவும் ஒருதலைபட்சமாக உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட அதிகர் ரன்களை எடுக்கும் வீரர், உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் ஆடியவர் திடீரென உடற்தகுதி பெறவில்லை என்பது சரியாக இல்லை. உடற்தகுதி இல்லாதவர் எப்படி முழு ஐபிஎல் தொடரையும் ஆடி, உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஆடி ரன்களைக் குவித்திருக்க முடியும்.
இப்போது ஊதிப்பெருக்கப்படும் ஒரு உடற்பரிசோதனை முறை திடீரென ஒருவரை உடற்தகுதி இல்லை என்று கூறுவது பொருத்தமாக இல்லை.

இந்த சிஸ்டம் மிகவும் கடுமையாகவும் அடக்குமுறையாகவும் உள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வீரர்களின் பின்னால் நின்று அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும். திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். பிசிசிஐயில் ஒரு நிலையற்ற நிலைமைகளை வைத்து ஒருசிலர் விளையாட்டு காட்டுகின்றனர். டெஸ்ட் நடத்துவது வெளிப்படையாகவும் பொதுமக்கள் பார்வைக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.