உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் தன்னால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியும் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணின் அனுபவம் மிக்க வீரர் லசித் மலிங்கா. 3 முறையாக உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள மலிங்கா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சகநாட்டு வீரரான ஜெயசூர்யாவுக்கு இணையான ஒருநாள் விக்கெட் வீழ்த்தியவர் எனும் பெருமையைப் பெறுவார் மலிங்கா. ஜெயசூர்யா 323 விக்கெட்டுகள் எடுத்துள்ள நிலையில் மலிங்கா 322 விக்கெட்டுகளுடன் உள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு மே.இந்தியத் தீவுகளில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டை மலிங்கா வீழ்த்தி சாதனை படைத்தார். அதுபோன்ற சாதனையை இந்த உலகக்கோப்பையிலும் செய்வேன் என்று மலிங்கா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கை வீரர் மலிங்கா பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்த முறை ஹாட்ரிக் எடுப்பீர்களா, இங்கிலாந்து மைதானங்கள், சூழல் சாதகமாக இருக்கிறதா என கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் கூறியதாவது:
”ஏன் என்னால் இந்த உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியாது என்று நினைக்கிறீர்களா? நான் இந்த முறையும் முயற்சிப்பேன். ஒருவேளை ஹாட்ரிக் எடுத்துவிட்டால் அது சிறப்பானதாக இருக்கும்.
இங்கிலாந்தில் நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். அதன் சூழல்கள் எனக்கு பந்துவீச்சில் பல்வேறு சோதனை செய்துபார்க்க உதவியாக இருக்கும். அங்கு வெயில், குளிர் எதுவாக இருந்தாலும், ஒருபந்துவீச்சாளருக்கு உண்மையான சோதனை சூழலுக்கு ஏற்றார்போல் எவ்வாறு பந்துவீசுகிறார்கள் என்பதுதான்.

விக்கெட் வீழத்துவதில் இங்கிலாந்தில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசி, கோப்பையை வென்றோம். அந்த நம்பிக்கையுடன் நான் பந்துவீசுவேன். ஆனால், சூழல்களும் ஆட்டமுறையும்தான் வெவ்வேறாக இருக்கின்றன. அதாவது இந்தியாவில் ஐபிஎல் என்பது டி20 போட்டி. இங்கு ஒருநாள் போட்டித்தொடர். எனக்கு விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை இருக்கிறது, நம்பிக்கையும் இருக்கிறது.
பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கை அணியில் இளம் வீரர்கள் அதிகமாக இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார்கள். இவர்கள் திறமைசாலிகள். தங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நிச்சயம் ரசிகர்கள் அறியும் வகையில் அவர்கள் விளையாடுவார்கள்”.
இவ்வாறு மலிங்கா தெரிவித்தார்.