ஷுப்மன் கில் பற்றி நான் அனைவரும் முன்னிலையிலும் பேசியதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் துவக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருமே சோதப்பியதால், 3வது டி20ல் இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டு ப்ரிதிவி ஷா பிளேயிங் லெவனுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருமே மீண்டும் ஒருமுறை ஓப்பனிங் பேட்டிங் செய்தனர். இஷான் கிஷன் 1 ரன் மட்டுமே அடித்து துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் ஷுப்மன் கில் அரைசதம் கடந்தபின் அசுர வேகத்தில் ரன் குவித்து டி20 போட்டிகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதிவரை அவுட்டாகாமல் 123(63) விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது. ஆனால் நியூசிலாந்து அணியால் ஷுப்மன் கில் அடித்த ஸ்கொரை எட்டமுடியவில்லை. 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்த போட்டிக்கு முன்புவரை ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் விளையாடும் விதத்தை முன்னாள் இந்திய வீரர்கள் கம்பீர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலரும் விமர்சித்தார்கள். இவரது அணுகுமுறை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துவரும். டி20 போட்டிகளுக்கு செட் ஆகாது. இனியும் ஹர்திக் பாண்டியா முட்டாள்தனம் செய்யாமல் ப்ரிதிவி ஷாவை பிளேயிங் கொண்டுவரவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் தனது அதிரடியான சதத்தின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் ஷுப்மன் கில். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராகவும் உயர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, டி20 போட்டிகளில் ஷுப்மன் கில் அணுகுமுறை பற்றி பேசியதை தவறு என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
“நான் ஷுப்மன் கில் பற்றி முன்பு பேசியதை ஒப்புக் கொள்கிறேன். அப்போது அவர் ஆடிய விதத்தை விமர்சித்தேன். ஆனால் தற்போது மிகப்பெரிய ஸ்கோர் அடித்து அனைத்தையும் பொய்யாக்கி உள்ளார்.
நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அவை அனைத்தும் மிகவும் கசப்பானவை. இப்போது டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் மத்தியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து வைத்திருக்கிறார். மேலும் இவர் அடித்த ஸ்கோருக்கும் நியூசிலாந்து அணி மொத்தமாக அடித்த ஸ்கோருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கிறேன். இது இன்னும் வியப்படைய செய்திருக்கிறது. ஷுப்மன் கில் பேட்டிங் செய்த விதத்தை பார்த்து எனது தவறை உணர்ந்து கொண்டேன்.” என்றார்.