பும்ரா மீண்டும் எப்போது அணிக்குள் வருவார் என பேசியுள்ளார் ரோகித் சர்மா.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் மூன்று மாத காலம் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார்.
பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமில் சிகிச்சை பெற்று வந்த பும்ரா, கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் முழுமையாக குணமடைந்து விட்டார். அதன் பிறகு கூடுதலாக ஒரு வாரம் ஓய்வு கொடுக்கப்பட்டு, இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் பிசிசிஐ இந்த முடிவை பின்வாங்கி ஒருநாள் தொடரிலிருந்து பும்ராவை விலக்கியது. அதன் பிறகு நடைபெற்று முடிந்த நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர், அடுத்ததாக வரவிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என எதிலும் பும்ரா சேர்க்கப்படவில்லை.
இதற்கான காரணத்தை பிசிசிஐ இதுவரை தெரிவிக்கவில்லை என்பதால், குணமடைந்த பும்ராவிற்கு என்ன ஆயிற்று? எதற்காக இன்னும் அணியில் எடுத்து வரப்படவில்லை? என்கிற பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ரோகித் சர்மா பதில் கொடுத்திருக்கிறார்.
மூன்றாவது ஒருநாள் போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்தது. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில்,
“நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது போல நானும் பும்ராவின் வரவிற்காக காத்திருக்கிறேன். ஆஸ்திரேலியா அணியுடன் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு என்னிடம் இருக்கிறது. தேர்வு குழு என்ன முடிவு எடுக்கிறது என்று பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
பும்ராவிற்கு முதுவுக்கு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை பும்ரா காயம் விஷயத்தில் அவசரப்பட்டு அணிக்குள் எடுத்து வந்தது அவருக்கும் இந்திய அணிக்கும் பாதகமாக முடிந்து விட்டதால், முக்கியமான தொடர்களில் பும்ரா விளையாட முடியவில்லை. மீண்டும் அதுபோல நடந்து விடக்கூடாது. இந்த வருடம் இந்தியாவிற்கு இடைவிடாமல் பல தொடர்கள் இருக்கின்றன. அதற்கு பும்ரா தேவைப்படுவார். ஆகையால் இப்போதே போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு வரட்டும்.
முதுகு பகுதி காயம் இருப்பதிலேயே மிகவும் தீவிரமான காயம். அதற்காகத்தான் இவ்வளவு காலம் அவருக்கு ஓய்வு கொடுக்கிறோம். ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் இருப்பார் என நினைக்கிறேன்.” என்றார்.