இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தது எரிச்சலைத் தந்தது என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர கே.எல்.ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவரை, டெஸ்ட் வீரர் என்று கருதி முத்திரைக் குத்தி ஓரங்கட்டி வந்தனர். இதைப் போக்கும் விதமாக கடந்த ஐபில் போட்டியில் அதிரடியாக விளையாடினார் ராகுல்.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த அவர், விரைவான அரை சதம் அடித்து அசத்தினார். வெறும் 15 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அதிரடி சதமும் அடித்தார். அப்போது பேசிய ராகுல், ‘டெஸ்ட் வீரர் என்று எனக்கு முத்திரை குத்தியுள்ளனர். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அடித்து ஆடினேன்’ என்றார் கவலையுடன்.
இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சதம் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் கே.எல்.ரா குல். இதுபற்றி அவர் கூறும்போது, ’ஐபிஎல் போட்டிக்கு முன், சர்வதேசப் போட்டிகளில் அதிகமாக விளையாட வில்லை. வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும்போதுதான், வருகிற ஒவ்வொரு வாய்ப்பும் எவ்வளவு முக்கிய மானது என்பதையும் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வரும். அணியில் இடம்பெறாமல் இருந்த காலமும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நேரமும் எனக்கு வெறுப்பையும் எரிச்சலையும் தந்தன. அதனால் வாய்ப்பு கிடைத்தால் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். சதம் அடிக்க வேண்டும் என்ற முடிவோடு ஆடினேன்.
அந்த வாய்ப்பு இங்கிலாந்தில், முதல் டி20 போட்டியிலேயே கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து அனைத்துப் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவேன்.

அணியில் பும்ரா இல்லாதது பின்னடைவுதான். இருந்தாலும் குல்தீப், சேஹல் இருவரும் இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து வீரர்களுக்கு சவால் கொடுப்பார்கள். அணியில் அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பது எங்களுக்கு பெரிய பலம். சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் அணியில் பேட்டிங் வரிசை அமைக்கப்படுகிறது. எந்த வரிசையில் இறக்கி ஆடச் சொன்னாலும் நான் ஆடுவேன்’ என்றார்.