சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சில மாற்றங்களைத் தைரியமாகச் செய்தாலும் முடிவு ஓவர்களில் சொதப்பியது, இதனால் பேட்டிங் பவரில்தான் சென்னை தொடர்ந்து வெல்கிறது. நேற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக தோனி, வாட்சன், ராயுடு அதிரடியில் சென்னை வென்று முதலிடம் சென்றது.
தோனி தன் டவுன் ஆர்டரை சரியாக டைமிங் செய்தார். 5-ம் நிலையில் இறங்கினார். இது பற்றி நேற்று ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:
”காயம் காரணமாகத்தான் நான் அதிகமாக உடற்பயிற்சி செய்வதில்லை. டி20யில் பெரிய பணிச்சுமை கிடையாது. எனவே அதனை எளிதில் நிர்வகிக்க முடியும். நல்ல தொடக்கம் காண வேண்டுமென்பது முக்கியம், அது ரன்கள் அளவில்தான் என்றில்லை. நல்ல கூட்டணி கூட நல்ல தொடக்கம்தான்.
என்னை நானே முன்னாள் இறக்கிக் கொண்டு 5-ம் நிலையில் இறங்கினேன். 8-வது 10-வது ஓவர்களின் போது இறங்க முடிகிறது என்றால் அது ஒரு நல்ல கேளிக்கையாகவே உள்ளது. முன்னால் இறங்கும் போது நாம் எப்போது பெரிய ஷாட்களை ஆடுவோம் என்பது எதிரணி பவுலர்களுக்குத் தெரியாது.
பிட்சைப் பார்த்தவுடன் அயல்நாட்டு பேட்ஸ்மென் ஒருவரைக் களமிறக்கலாம் என்று நினைத்தோம். சாம் பில்லிங்ஸுக்கு ஓய்வு தேவை. ராயுடு மிடில் ஆர்டரில் ஸ்திரத்தன்மையை அளிப்பார் என்பதால் டுபிளெசிஸை தொடக்கத்தில் இறக்கினோம். அது சிறந்த முடிவு. தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்தே இங்கிடி அபாரமாக வீசுகிறார். அவர் உயரமாக இருப்பதால் பவுன்ஸ் செய்கிறார்.
முடிவு ஓவர்கள் நன்றாக இல்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்போது சிறிய மைதானங்களில் நடைபெறும் அப்போது இது போன்று வீச முடியாது, அங்கு தவறுகளுக்கு இடமில்லை.”
இவ்வாறு கூறினார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
புனேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான டு பிளஸ்ஸி 33 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
212 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடிய விஜய் ஷங்கர் 31 பந்துகளில் 54 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அசிப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.