உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து சிறந்த அணி என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தெரிவிக்கையில்,
“இங்கிலாந்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி. என்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து தான் சிறந்த அணி. அதனால், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். தற்போதைய நிலையை வைத்து தான் நாம் எதையும் கூற வேண்டும். இங்கிலாந்து அணி செயல்படும்விதம் என்னை கவர்ந்துள்ளது. இங்கிலாந்து மிகப் பெரிய அளவிலான ரன்களை குவித்துள்ளது.
பெரும்பாலான அணிகள் முதல் 15 ஓவர்களிலும், கடைசி 15 ஓவர்களிலும் அதிரடியாக விளையாடி, நடு ஓவர்களில் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இங்கிலாந்து, இந்தியா போன்ற அணி 50 ஓவர்கள் முழுவதும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த தாக்கத்தைத்தான் டி20 கிரிக்கெட் ஏற்படுத்தியுள்ளது.
எனினும், உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்லும் என்று நான் கூறவில்லை. இங்கிலாந்து சிறந்த அணி மேலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம். ஆஸ்திரேலியாவும் சிறப்பாக செயல்படும்.
தென் ஆப்பிரிக்க அணி எப்போதுமே சிறந்த அணி தான். மேற்கிந்தியத் தீவுகள் கணிக்க முடியாத அணி. அந்த அணி நன்றாகவும் விளையாடும், மோசமாகவும் விளையாடும். அதேபோல் தான் பாகிஸ்தானும். அதனால், இந்த உலகக் கோப்பை சுவாரஸ்யமான ஒன்று. இங்கிலாந்து மற்றும் இந்தியாவை வீழ்த்துவது கடினம். ஆனால், ஆஸ்திரேலியாவின் நிலையை பார்க்கும்போது, இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறலாம்” என்றார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நல்ல ஃபாமிற்கு வந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணியின் பேட்டிங்கை அசைக்க முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கில் ஜாசன் பெரெண்ட்ராஃப், பட் கம்மின்ஸ், மிட்ஜெல் ஸ்டார்க், கேன் ரிசர்ட்சன் என ஒரு படையே உள்ளனர். அத்துடன் இங்கிலாந்து மைதானங்கள் ஆஸ்திரேலியாவிற்கு பழக்கப்பட்ட மண் என்பதால், அது மேலும் கூடுதல் பலம் சேர்க்கும்.