டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறார் சூரியகுமார் யாதவ்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி வரையிலான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்து வந்த சூரியகுமார் யாதவ் தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முகமது ரிஸ்வான் மற்றும் டெவான் கான்வெ இருவருக்கும் அடுத்த இடத்தில் சூரியக்குமார் யாதவ் இருந்து வந்தார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரைசதம் மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான அரைசதம் என இரண்டு போட்டிகளில் இந்தியாவிற்கு முக்கிய பங்காற்றியதால் இவரது தரவரிசை புள்ளி அதிகரித்துள்ளது.
தற்போது 863 புள்ளிகளுடன் டி20 போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தற்போது ஒரு இடம் பின்தங்கி 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சிஎஸ்கே மற்றும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டெவான் கான்வெ 792 புள்ளிகள் இருக்கின்றனர்.
உலககோப்பையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் எவ்வித மாற்றமும் வெற்றி 780 புள்ளிகளுடன் இருக்கிறார். ஆனால் அவரது தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி நான்காவது இடத்தில் இருக்கிறார்.
உலகக் கோப்பையில் சதம் அடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது 703 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார். டெவான் கான்வெ-க்கு பிறகு முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் இரண்டாவது நியூசிலாந்து வீரர் இவர் ஆவார்.
அதேபோல் வங்கதேசம் அணிக்கு எதிராக சதம் விலாசியே தென்னாபிரிக்கா வீரர் ருசோவ், அதற்கு அடுத்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் ஒரு இடம் பின்தங்கி 689 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
உலககோப்பையில் அசத்தி வரும் விராட் கோலி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி 638 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் எவரும் இல்லை என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது.