2020-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை முன்னாள் சாம்பியன் இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டன என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இந்த இரு அணிகளும் தகுதிச்சுற்றுகளில் விளையாடி, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியும். அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன. இலங்கையும், வங்கேதசமும் 9 மற்றும் 10 இடங்களில் இருப்பதால் அந்த அணிகள் நேரடியாகப் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டன.

2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன், 3 முறை இறுதிப்போட்டிவரை முன்னேறிய பெருமை கொண்டது இலங்கை அணி. ஆனால், இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி கூட நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டநிலையில், இலங்கை பங்கேற்க முடியாமல் போனது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கக்கூடியதாகும்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரத்தை வெளியிட்டது ஐசிசி. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கு 10 அணிகள் ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதிபெறும். ஆனால் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகள் பெயரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து. 4-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 5-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா, 6-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், 8-வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் வங்காள தேச அணி தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும். தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
இலங்கை அணி தகுதிச்சுற்று மூலமே உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து அந்த அணியின் கேப்டன் ரசித் மலிங்கா வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ இந்த முடிவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எங்களால் சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெறமுடியாவிட்டாலும் கூட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு அணியும் ஆண்டின் கடைசியில் முதல் 8 இடங்களில் இடம் பெறுவது அவசியம் என்று எண்ணுவது இயல்புதான். குரூப் பிரிவில் எங்களுக்கு மற்ற நாடுகளுடன் விளையாடுவதற்குக் கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறுகையில், “ சமீபகாலமாக எங்கள் செயல்பட்டுவரும் விதம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்த சவாலில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெல்வோம். ஏன் நேரடியாகத் தகுதிபெற இயலவில்லை எனத் தெரியவில்லை. இன்னும் காலம் இருக்கிறது, நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் “ எனத் தெரிவித்தார்.