ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அதன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முதலில் ஆடிய இங்கிலாந்து 311/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வியாழக்கிழமை லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தும், பலமான தென்னாப்பிரிக்காவும் மோதின.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜானி பேர்ஸ்டோ கோல்டன் டக்: இங்கிலாந்து தரப்பில் ஜேஸன் ராய்-ஜானி பேர்ஸ்டோ தொடக்க வரிசை வீரர்களாக களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமையும் வகையில் இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் பேர்ஸ்டோ கோல்டன் டக் அவுட்டானார். பின்னர் ஜேஸன்-ஜோ ரூட் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் 17 ஓவர்களில் 100-ஐ கடந்தது.
ஜேஸன் ராய், ஜோ ரூட் அரைசதம்: நிதானமாக ஆடிய ஜேஸன் ராய் 8 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 54 ரன்களை எடுத்து தனது 15-ஆவது அரைசதத்தை பதிவு செய்து பெலுக்வயோ பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டும் 5 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 51 ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் டுமினியிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இது ஜோ ரூட்டின் 31-ஆவது ஒரு நாள் அரைசதமாகும். அப்போது 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து.
மொர்கன்-பென் ஸ்டோக்ஸ் அபாரம்: அதன் பின் கேப்டன் இயான் மொர்கன்-ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர்.
மொர்கன் 7000 ரன்கள்: தனது 200-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் மொர்கன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். அதிரடியாக ஆடிய மொர்கன் தனது 46-ஆவது அரைசதத்தையும் பதிவு செய்தார். 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 57 ரன்களுடன் தாஹிர் பந்தில் அவுட்டானார் அவர். ஸ்டோக்ஸ் உடன் இணைந்து 100 ரன்களை சேர்த்தார் மொர்கன்
அவரைத் தொடர்ந்து ஆட வந்த ஜோஸ் பட்லர் 18, மொயின் அலி 3, கிறிஸ் வோக்ஸ் 13, என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
பென் ஸ்டோக்ஸ் அபாரம் 89: மறுமுனையில் அபாரமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரியுடன் 79 பந்துகளில் 89 ரன்களை விளாசி லுங்கி நிகிடி பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் தந்தார்.
லியாம் பிளங்கட் 9, ஜோஃப்ரா ஆர்ச்சர் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து 311/8: இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை குவித்தது இங்கிலாந்து.
லுங்கி நிகிடி 3 விக்கெட்: தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி அபாரமாக பந்துவீசி 3-66 விக்கெட்டுகளையும், தாஹிர் 2-61, ரபாடா 2-66 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா தரப்பில் குயின்டி டி காக்-ஹாஸிம் ஆம்லா களமிறங்கினர்.
காயத்தில் இருந்து மீண்டும் ஆட வந்த ஆம்லா 13 ரன்களுக்கும், ரபாடா 11 ரன்களுக்கும், தாஹிர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.
இறுதியில் 39.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா. நிகிடி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அறிமுக வீரர் ஆர்ச்சர் அபாரம்:
இங்கிலாந்து தரப்பில் முதன்முறையாக அறிமுகமான ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி 3-27 விக்கெட்டுகளை சாய்த்தார். பிளங்கட் 2-37, பென் ஸ்டோக்ஸ் 2-12 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஹாஸிம் ஆம்லா காயம்: அறிமுக வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 145 கி.மீ வேகத்தில் வீசிய பந்தை எதிர்கொண்ட ஆம்லாவின் ஹெல்மெட்டில் பந்து பலமாக பட்டதால் காயமடைந்தார். அவரை சோதித்த மருத்துவ நிபுணர் ஆம்லா தொடர்ந்து ஆட முடியாது என கூறியதால், காயத்துடன் வெளியேறினார் அவர். அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் ஆட வந்தார்.