உலக கோப்பை தொடரில் கலந்து இருக்கும் போது இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்ற முனைப்புடன் களமிறங்குவோம் என sகர் தவான் பேசியுள்ளார்
இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 போட்டிக்கான இந்திய அணி மும்பையில் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளை வெவ்வேறு நாடுகள் அறிவித்து வருகின்றன. இதே போல் தேர்வுக் குழுவும் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் வீரர்களின் திறமையை ஆய்வு செய்து வருகிறது.
இந்திய அணி வரும் ஜூன் 5-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது. இந்திய அணியில் 4-ஆம் இடம், ஆல்ரவுண்டர், சுழற்பந்து வீச்சாளர்கள் இடங்களை எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்பாக தேர்வுக் குழு தீவிரமாக சிந்தித்து வருகிறது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோர் தரும் தகவல்களின்படியும். அப்போதைய சூழல்களின்படியும் இந்திய அணி தேர்வு அமையும் என துணை கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.
பதிலி ஓபனர், கூடுதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர், போன்ற இடங்களை நிரப்புவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது, வறண்ட வானிலை நிலவியது குறிப்பிடத்தக்கது. 4-ஆம் நிலை பேட்ஸ்மேனாக தற்போது அம்பதி ராயுடு ஆடி வருகிறார். ஆனால் அவர் சோபிக்கவில்லை. இளம் வீரர்கள் லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் பெயர்களும் அடிபடுகின்றன. ஆஸி. ஜாம்பவான் பாண்டிங், இதில் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கோலி வழக்கம் போல் 3-ஆம் நிலை பேட்ஸ்மேனாகவே களமிறங்க வேண்டும் என கங்குலி கூறியுள்ளார்.
இந்நிலையில் வரும் 15-ஆம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் 10 நாடுகளும் தங்கள் அணிகளை அறிவிக்க வரும் 23-ஆம் தேதி கடைசி நாளாகும்.
உலகக் கோப்பையில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியாவும் கணிக்கப்பட்டுள்ளது.