உலகக்கோப்பை தொடரில் தேர்வானது கனவு நனவானது போல் உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளனர்.
12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.
முன்னதாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை தன்னிடம் இருப்பதாக தமிழக வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

உலக கோப்பை மிகப்பெரிய போட்டி. இதற்கான அணியில் இடம் பெறுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அனைத்து போட்டிகளிலும் டோனிதான் விக்கெட் கீப்பராக இருப்பார். புகைப்படத்தில் மட்டுமே எனது படம் வரும். அவர் காயம் அடைந்தால் வாய்ப்பு வரும். சிறந்த பேட்ஸ்மேனாக வாய்ப்பு அளிக்கப்படும். 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. பின்வரிசையில் ஆடினாலும் என்னால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியும்.
உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணி திறமை வாய்ந்தது. நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் எங்களது கனவு நனவாகி இருக்கிறது என்று மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் கூறி உள்ளார்