நானும், என்னுடன் சேர்ந்து மற்ற கீப்பர்களும் சிறப்பாக விளையாடி இருந்தால், தோனிக்கு அணியில் இடம் கிடைத்திருக்காது என்று பர்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு நேரத்தில் விக்கெட் கீப்பர்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. குறிப்பாக தீப்தாஸ் குப்தா, சபா கரீம் அஜய் ரத்ரா, பர்தீப் படேல், விர்திமான் சாஹா தினேஷ் கார்த்திக், எனப் பெரிய பட்டாளமாக இருந்தனர். ஆனால், இவர்கள் யாரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளத் தவறியதால், தோனி எனும் பெரும் புயல் இவர்களை வாரிச்சுருட்டி வீசிச் சென்றது.
அனில் கும்ப்ளேவுக்கு பின், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பிரிவுகளுக்கும் எம்எஸ் தோனி எனும் அசைக்கமுடியாத ஆளுமை இந்திய அணியை வழிநடத்திச் சென்றது. டெஸ்ட் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை எனத் தெரிந்ததும் தனது ஓய்வை தோனி அறிவித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் ஒருநாள், டி20 கேப்டன்ஷிப்பையும் துறந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராகவும், அவரின் கீப்பிங் திறமைக்கு அருகே யாரும் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்குச் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
ஆனால், தோனி அணிக்குள் இருக்கும் வரை அவராகப் பார்த்து ஓய்வு எடுக்கும் வரை எந்தவிதமான விக்கெட் கீப்பருக்கும் இடம் இல்லாத சூழல்தான் இருந்தது. குறிப்பாக பர்தீவ் படேல், தினேஷ் கார்த்திக், விர்திமான் சாஹா ஆகியோர் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும், தோனிக்கு பதிலி வீரர்களாகவே தொடர்ந்தனர்.
தோனி சில நேரங்களில் இல்லாத நிலையில், அவ்வப்போது தினேஷ் கார்த்திக்கும், பர்தீவ் படேலும் சர்வதேசப் போட்டியில் வாய்ப்பு பெற்றனர். ஆனால், தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருந்திருந்தால், அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்திருக்க முடியும். ஆனால், அதைத் தவறிவிட்டனர் என்பதுதான் நிதர்சனம்.
சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தினேஷ் கார்த்திக், நான் அணியில் என்னுடைய இடத்தை சாதாரண வீரரிடம் இழக்கவில்லை, தோனி போன்ற சிறந்த வீரரிடம்தான் இழந்தேன் என்று தெரிவித்தார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.
ஆனால், டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு அறிவித்தபின் தனக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பர்தீவ் படேலுக்கு, விர்திமான் சாஹாவும், தினேஷ் கார்த்திக்கும் கடும் போட்டியாளர்களாக வந்தனர். இவர்களை மீறி அவ்வப்போது வாய்ப்பைப் பெற்று வந்தாலும், சோபிக்க முடியவில்லை.
இது குறித்து கவுரவ் கபூர் நடத்தும் ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ எனும் நிகழ்ச்சியில் பர்தீவ் படேல் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
”கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர், ஜாம்பவான். ஏராளமானோர் என்னிடம் கூறியது என்னவென்றால், நீ பிறந்த ஆண்டு சரியில்லை, நீ சில ஆண்டுகள் முன்கூட்டியோ அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்போ பிறந்திருக்க வேண்டும் என்றனர். நீ தவறான ஆண்டில் பிறந்துவிட்டாய் என்றனர்.
ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்துக்கு முன்பே நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டோம். நாங்கள் மட்டும் மோசமாக விளையாடமல் இருந்திருந்தால், இன்று தோனியால் அணியில் இடம் பிடித்திருக்க முடியாது, முதலிடத்தைப் பிடித்திருக்க முடியாது.
ஒருவேளை, இப்படி யோசித்துப் பார்க்கலாம், நான், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் சிறப்பாக, எங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடாத காரணத்தால்தான் தோனி அணிக்குள் வந்தார் என்று குறிப்பிடலாம்.
ஆதலால், சிலர் நான் தவறான ஆண்டில் பிறந்துவிட்டேன் எனக் கூறுவது எல்லாம் என்னை ஆறுதல்படுத்திக்கொள்ள உதவும். என்னை வசதியாகவும், கவலைப்படாமல் வைத்திருக்க உதவும். ஆனால், உண்மையில் ஆழ்மனதில் இருக்கும் உண்மை என்னவென்றால், தோனி அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் நிதர்சனம். தோனியின் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் இல்லாமல் தோனியின் வெற்றி இல்லை”
இவ்வாறு பர்தீவ் படேல் தெரிவித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பர்தீவ் படேல் வாய்ப்பு பெற்று 8 ஆண்டுகளுக்குப் பின் அணிக்குத் திரும்பினார். ஆனால், விர்திமான் சாஹா உடற்தகுதி பெற்றபின் மீண்டும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
இந்த ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த போது 2-வது விக்கெட் கீப்பராக பர்தீவ் படேல் சென்றபோதிலும், அவரால் வாய்ப்பு பெற முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது தினேஷ் கார்த்திக்குச் சென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெறுகிறாரா அல்லது பர்தீவ் படேல் பெறுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.