டீவில தான் இப்படி ஒரு சம்பவத்த பார்த்திருப்போம்… சத்தியமா என்னால நம்பவே முடியல; வேதனையை கொட்டி தீர்த்த கே.எல் ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 166 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களை எட்டிய ஹைதராபாத் அணி வரலாறும் படைத்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிசேக் சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர், பொறுமை மற்றும் பயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கான ருத்ர தாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தி அசுர வேகத்தில் ரன்னும் குவித்தனர். ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும், அபிசேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 9.4 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறும் படைத்தது.
இது குறித்து கே.எல் ராகுல் பேசுகையில், “என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இது போன்ற பேட்டிங்கை டீவியில் மட்டும் தான் பார்த்துள்ளோம், உண்மையில் என்னால் இதை நம்பவவே முடியவில்லை. ஹைதராபாத் வீரர்களின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் தான் இருந்தது என்பதே உண்மை. அவர்களது திறமையை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் இதற்காக மிக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருப்பார்கள் என கருதுகிறேன். இருவருமே எங்களுக்கு ஒரு சிறு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை, இதனால் எங்களால் ஆடுகளத்தின் தன்மையை கூட புரிந்து கொள்ளவில்லை, அதற்கு கூட அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. தோல்வியை சந்திக்கும் போது நாம் எடுத்த முடிவுகள் மீது கேள்வி எழுவது சாதரணம் தான். பேட்டிங்கில் பவர்ப்ளே ஓவர்களில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் போட்டியை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து வர முடியவில்லை. நாங்கள் 40 முதல் 50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நிக்கோலஸ் பூரண் மற்றும் ஆயூஸ் பதோனியின் சிறப்பான பேட்டிங்கின் மூலமே எங்களால் 165 ரன்கள் எடுக்க முடிந்தது, ஆனால் நாங்கள் ஒருவேளை 240 ரன்கள் எடுத்திருந்தாலும் அதையும் ஹைதராபாத் அணி அசால்டாக எட்டியிருக்கும் என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.