மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? என இம்ரான் தாஹிர் கலக்கல் ட்விட் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான 24-வது ஐபிஎல் லீக் போட்டியில் தோனியின் அதிரடியால் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். இதனால் 206 ரன்கள் என்ற கடினமான இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருந்தாலும் சென்னை அணியின் கேப்டன் தோனி சிக்சர் மழை வீசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதனையடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்ச சட்ட போட் மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? என இம்ரான் தாஹிர் கலக்கல் ட்விட் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில், “ காட்டுல வேட்டையாடுற சிங்கம் பார்த்திருப்ப.. காக்கி சட்டை போட்ட சிங்கம் பார்த்திருப்ப. மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் தூர சிக்ஸ் டா.. பாக்குறியா..? இது பொசுக்குற கூட்டம். கொஞ்சம் தள்ளி நில்லு கண்ணா.. எடுடா வண்டியா.. போடுடா விசில” என பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணிக்காக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
போட்டி தொடங்கியதில் இருந்தே சென்னை அணியினரின் பந்துவீச்சில் ஒரு கை பார்த்தனர். டிவில்லியர்ஸ் ஒரு புறம் பந்தை விளாசித் தள்ள, மறுபுறம் டி காக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிப்படியாக ஆட்டம் சூடு பிடிக்க, இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. வாட்சன் மற்றும் ராயுடு தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர். ஆனால் 7 ரன்களிலேயே நெகி வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை ரசிகர்களில் பதற்றம் அதிகரித்தது. இவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 11 ரன்கள் எடுத்த நிலையிலும், பில்லிங்ஸ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 3 ரன்களில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாகக் களமிறங்கினார் சென்னை அணியின் தல தோனி. முதலில் தோனி – ராயுடு ஜோடி நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி வெற்றி இலக்கைத் துரத்தினர். ராயுடு 82 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக தோனியுடன் ஜோடி சேர்ந்தார் பிராவோ.
சென்னை அணி கேப்டன் தோனி பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்க ஆரம்பித்தார். கடைசி ஓவர் பரபரப்பில் தனக்கே உண்டான முறையில் சிக்சர் அடித்து சென்னை அணியை வெற்றி அடையச்செய்தார் தோனி. அதன்படி 19.4 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
Kattula vettayadara singham pathiruppa kakkisattai potta singham pathiruppa manja sattai potta mahendra singham pathurukkiya ? Oongi adicha 110meter dhooram 6 da pakkaraya ? Ithu posukkara kootam konjam thalli nillu kanna #eduda vandiya poduda whistle @ChennaiIPL
— Imran Tahir (@ImranTahirSA) April 25, 2018