சவுத்தாம்டன் நகரில் நாளை நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நசுக்கப்பட்ட நம்பிக்கையோடு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது வலிமையான இந்திய அணி.
மாலையில் நடக்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து மோதுகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இந்தப் போட்டி நிச்சயம் ஒரு தரப்பாகவே அமையப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். யார் வெல்லப் போகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் போது, இந்த ஆட்டத்தில் ஆடும் ஆப்கானிஸ்தான் அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழக்காமல் புத்திசாலித்தனமாக வங்கதேசம் போன்று விளையாடுவது போட்டியை சுவாரஸ்யப்படுத்தும்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மோதியதில்லை. முதல் முறையாக நாளை மோதுகிறது
இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோல்வியும், ஆசியக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தை சமனும் செய்தது. அணிக்குள் ஏராளமான குழப்பம், வீரர்களுக்கு இடையே பல்வேறு மனக்குழப்பம் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி அவற்றை ஒதுக்கிவைத்து விளையாடுதல் அவசியம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு போட்டி மழையால் ரத்து என 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில ஒருவெற்றிகூட இல்லாமல் இருக்கிறது.
வலிமையான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை அனாசயமாக வீழ்த்திவிட்டுக் களம் புகும் கோலி படைக்கு இந்த ஆட்டம் சவாலாக இருக்கப் போவதில்லை. ஆனால், இந்திய அணியில் தொடர்ந்து வரும் காயங்கள் வேதனைப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்த தவண் காயத்தால் தொடரில் இருந்து விலகி இருப்பது, புவனேஷ்வர் குமார் அடுத்த 3 போட்டிகளுக்கு விளையாட முடியாதது, விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் போன்றவை அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா 2 சதங்கள், அரை சதம் அடித்து ரன் சேர்ப்பு பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். விராட் கோலி களத்தில் அசைக்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இதுவரை 2 அரை சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். இதுதவிர தோனி, ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது.
இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஏமாற்றம் அளித்தாலும், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என எதிர்பார்க்கலாம்.
உலகக்கோப்பை அணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பும்ரா, முதல் முறையாக களமிறங்கும் ஷமி ஆகியோரின் பந்துவீச்சை ஆப்கன் வீரர்கள் தாக்குப்பிடித்து விளையாடுவார்களா என்பது கேள்விக்குறிதான்.சுழற்பந்துவீச்சில் யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குச் சவாலாகவே இருக்கும்.