ஒருநாள் தொடரில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல்!!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிக்கள் கொண்ட தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். அவரது தடை பிடிப்பு காரணமாக இது நடந்துள்ளது.
அவருக்கு பதிலாக 30 வயதான பேட்ஸ்மேன் டேவிட் மலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவின் மாய சுழல் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, நாட்டிங்காமில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சித்தார்த் கவுல் அறிமுக வீராக இடம் பிடித்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ வும், ஜேசன் ராயும் களமிறங்கினர். ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இருவரும் அடித்து ஆடினர். வேகப்பந்துவீச்சில் சிறப்பாக ஆடிய இவர்களை, ’சைனாமேன்’ குல்தீப் தனது சுழலால் பிரித்தார். அவரது பந்தை அடிக்க இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். ஸ்கோர் 73 ரன்களாக இருந்த போது, ஜேசன் ராய் 38 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் (3 ரன்), பேர்ஸ்டோ (38 ரன்) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் குல்தீப் வீழ்த்த, தடுமாறத் தொடங்கியது இங்கிலாந்து அணி.
சேஹல் தன் பங்குக்கு கேப்டன் மோர்கனை (19 ரன்) வெளியேற்றினார். பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், பென் ஸ்டோக் ஸும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 198 ரன்களாக இருந்தபோது, குல்தீப் பந்தில் பட்லர் (53 ரன்) தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியானார். பின்னர் ஸ்டோக்ஸ் (50 ரன்), டேவிட் வில்லி (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டையும் குல்தீப் சாய்க்க, மொயீன் அலியும் (24 ரன்), அடில் ரஷித்தும் (22 ரன்) அந்த அணி, 250 ரன்களை கடக்க உதவினர். அந்த அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குல்தீப் யாதவ், 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறந்த பந்து வீச்சு இது. உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுக ளையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்து 269 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் அடித்து ஆடத் தொடங்கினர். தவான் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராத் கோலி இணைந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். எந்த பந்துவீச்சாளராலும் இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சதம் அடித்தார். இது அவருக்கு 18-வது சதம். விராத் கோலி 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி 40.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 114 பந்துகளில் 137 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் முகமது அலி, ரஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது.