சதம் அடித்த போது மனைவி இல்லாமல் இருந்ததை எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் ரோகித் பதிலளித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 67 (31), பட்லர் 34 (21), அலெக்ஸ் 30 (24), ஜானி 25 (14) ரன்கள் குவித்தனர்.
இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பறித்துக்கொடுத்தார். கேப்டன் கோலி 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக வந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதன்மூலம் இந்திய அணி கோப்பை வென்றது.
போட்டி முடிந்த பின்னர் தினேஷ் கார்த்திக், ரோகித் ஷர்மாவிடம் பேட்டி எடுத்தார். அப்போது கேள்வி கேட்ட தினேஷ், “3வது சதம் மற்றும் கோப்பை வென்றது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரோகித் ஷர்மா, “தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால்,
இந்தப் போட்டியில் அணியுடன் இணைந்து, எப்படி விளையாடி வெற்றியை பெறலாம் என்பதே எண்ணமாக இருந்தது. போட்டியில் எனது தனிப்பட்ட ஆட்டத்தை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதைவிட, அணிக்கு எப்படி ஒரு சிறப்பான தொடக்கம் கொடுக்கலாம் என்றே விளையாடினேன். ஏனென்றால் இன்றைய போட்டியில் வெற்றி என்பது மிகவும் முக்கியமானதாகும்” என்றார்.
அடுத்த கேள்வியை கேட்ட தினேஷ், “ரிதிகா (ரோகித் மனைவி) மைதானத்தில் இருந்தால் நீங்கள் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரிதிகா இல்லாமல் இந்த முறை சதம் அடித்துள்ளீர்கள். நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள், தனிமையில் இருப்பதை போன்றா?” என்றார்.
VIDEO WATCH: @DineshKarthik does some number crunching with @ImRo45 post the team's series win in Bristol. Also, does Rohit like to be called the HITMAN? Find out more – by @RajalArora
Link—->https://t.co/myRsPwgImC pic.twitter.com/F6dTIIQLtf— BCCI (@BCCI) July 9, 2018
அதற்கு பதிலளித்த ரோகித், “ஆமாம். எனக்கு கண்டிப்பாக தெரியும், எனது ஆட்டத்தை ரிதிகா டிவியில் பார்த்திருப்பாள் என்று. இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வந்துவிடுவார். ஆனால் அவரும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் போட்டியை பார்த்திருப்பார். அவர் இங்கு இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் அதுமுடியாமல் போய்விட்டது. பரவாயில்லை நாம் ஜெயித்துவிட்டோம். அத்துடன் இனி வரும் போட்டிகளில் ரிதிகா இருப்பார்.” என்று வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் கூறினார்.