பல பேர் வாய்ப்பு இல்லாம தவிச்சிட்டு இருக்காங்க… இப்ப வந்த சின்ன பையன் தான் உங்களுக்கு முக்கியமா..? ஆகாஷ் சோப்ரா விளாசல்
இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் சர்பராஸ் கான் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏன் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 25ம் தேதி துவங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ., கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், துருவ் ஜுரல் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஆவேஸ் கான், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துருவ் ஜூரலுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பதை பல முன்னாள் வீரர்களும் பாராட்டி பேசி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவோ, சர்பராஸ் கானை விட துருவ் ஜூரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “துருவ் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத வீரர். அவர் முதல் தர போட்டிகளில் கூட பெரிதாக விளையாடியது இல்லை. இதுவரை வெறும் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள துருவ் அதில் 790 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளதும், அவர் மிக சிறந்த போட்டிகளில் விளையாடியிருந்தாலும் அதிலும் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் அடித்திருப்பது எல்லாம் உண்மை தான். ஆனால் அவரை விட முதல்தர போட்டிகளில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கான் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. அதே போன்று இஷான் கிஷனும் தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை எல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. துருவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும் ஆடும் லெவனில் உடனடியாக இடம் கிடைக்காது என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், கே.எஸ் பாரத், துரூவ் ஜுரல், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், பும்ராஹ், ஆவேஸ் கான்.