2வது ஓடிஐ: கில், சூரியகுமார் யாதவ் அடிக்க ஆரம்பித்ததும் குறுக்கே வந்த மழையால் ஆட்டம் பாதிப்பு! உலகக்கோப்பை சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இந்தியாவிற்கு பாதிப்பா?

இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதிக்கொண்டன. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் இப்போட்டியில் இந்திய அணி நிச்சயம் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனை அடுத்து தவான் மற்றும் கில் இருவரும் இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக இறங்கினர். இருவரும் 2 மற்றும் 19 ரன்கள் முறையே இருந்தனர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியில் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் துவங்கியது. இம்முறை போட்டி 29 ஓவராக குறைக்கப்பட்டது. கேப்டன் தவான் மூன்று ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஜோடி சேர்ந்து 66 ரன்கள் அடித்திருந்தனர். 12.5 ஓவர்களில் 89/1 என இந்திய அணி இருந்தபோது, ஹேமில்டனில் மீண்டும் மழை பெய்ய துவங்கியது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஐசிசி விதிமுறைப்படி ஆட்டம் பாதியிலேயே இரத்ததானதாக களத்தில் இருந்த நடுவர்கள் இரு அணிகளின் கேப்டன்களிடம் தெரிவித்தனர்.  அப்போது  பேட்ஸ்மேன்கள் சூரியகுமார் யாதவ் 34 ரன்கள், கில் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் இந்த ஒருநாள் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடரின் கீழ் வருகிறது. இதன் வெற்றி தோல்வி சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்திய அணி இத்தொடரில் பின்தங்கியிருப்பதால் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Mohamed:

This website uses cookies.