இப்ப மிஸ் ஆகிடுச்சு, ஆனால் 2024 டி.20உலகக் கோப்பை எங்களுக்குத்தான் ; கெத்தாக பேசிய ஹர்திக் பாண்டியா
பழசை நினைச்சு கவலைப்படாம 2024 உலகக்கோப்பை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது.
குறிப்பாக நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. தொடர் துவங்குவதற்கு முன்பு கோப்பை நமக்குத்தான் என்று வாய் சவடால் விட்ட இந்திய அணி, தற்போது ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு பக்கம் விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டிருந்தாலும், இந்திய அணி வீரர்கள் மிகவும் தன்னம்பிக்கையாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர். உலகக் கோப்பை தொடரே நிறைவு பெற்று விட்டது இன்னும் அதையே ஏன் நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் வகையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றம் நடந்தது எங்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் ஒரு தொழில் முறை விளையாட்டு வீரர்களாக நாங்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும், மேலும் தோல்வியில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும், அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இரண்டு வருடங்கள் உள்ளது ஆனால் ஒரு தொழில் முறை வீரர்களாக நாங்கள் தற்பொழுதிருந்தே அதற்காக தயாராகிக் கொண்டுள்ளோம். எங்களுக்கு அடுத்த உலக கோப்பை தொடருக்கு அதிகமான நேரம் உள்ளது, இதனால் அதிக கிரிக்கெட் போட்டிகள் பங்கேற்று விளையாட முடியும், இதனால் அதிக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எங்களுக்கு போதுமான நேரங்கள் இருப்பதால், அணி குறித்தும் சூழ்நிலை குறித்தும் விவாதித்துக் கொண்டுள்ளோம் தற்பொழுது பங்கேற்கும் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி சந்தோசமாக விளையாடு வேண்டும், எதிர்காலத்தைப் பற்றி நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று ஹர்திக் பாண்டியா தன்னம்பிக்கையுடன் பேசியிருந்தார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.