இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களம் காணுகிறது.
விசாகப்பட்டினத்திலும் இந்தியா சறுக்கினால், கடந்த 15 ஆண்டுகளில் உள்ளூரில் தொடர்ச்சியாக 2 ஒரு நாள் தொடர்களை இழந்த முதல் நிகழ்வாக இருக்கும். மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி இதற்கு முன்பு தோற்றதில்லை. அந்த மோசமான சாதனையும் ஒட்டிக் கொள்ளும்.
பொல்லார்ட் தலையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார்கள். சென்னை ஆட்டத்தில் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் 2-வது விக்கெட்டுக்கு திரட்டிய 210 ரன்களே இலக்கை விரட்டும் போது வெஸ்ட் இண்டீசின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும். சூழ்நிலைக்கு தக்கபடி இருவரும் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதே போல் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்ரெல், அல்ஜாரி ஜோசப் மிரட்டினர்.
இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் விராட் கோலி (1,292 ரன்), ரோகித் சர்மா (1,268 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் (1,225 ரன்) உள்ளனர். தொடரின் முடிவில் இவர்களில் யார் ‘நம்பர் ஒன்’ ஆகப்போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும்.
விசாகப்பட்டினத்தில் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 6-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் 5 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 356 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு இங்கு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் சமனில் (இரு அணியும் தலா 321 ரன்கள் எடுத்தன) முடிந்தது நினைவிருக்கலாம். இந்த மைதானம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் ராசியானதாகும். இங்கு இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் அடித்திருக்கிறார்.