விராட் கோலிக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஆஸி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா!!
கொத்து, கொத்தாக இதற்குமுன் நாங்கள் ஆட்டமிழந்தது இல்லை, ஆனால், இந்த தொடரில் இருமுறை நடந்துவிட்டது, இனிமேல் சரிவுகளும் இருக்காது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்தார்.
ராஞ்சியில் நேற்று நடந்த 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆட்டத்தில் 251 ரன்களுக்கு 7 விக்கெட் என்கிற வலிமையான நிலையில் இந்திய அணி அணி இருந்தநிலையில், அடுத்த 30 ரன்களைச் சேர்ப்பதற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதுமட்டுமல்லாமல், தொடக்கத்தில் 90 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்ததோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3-வது போட்டியில் நாங்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததை ஏற்க முடியாது. இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற விக்கெட் சரிவைக் காண நாங்கள் தயாராக இல்லை. நல்லவிதமாக, நிலைத்து ஆடக்கூடிய பாட்னர்ஷிப் இனிவரும் போட்டிகளில் அவசியமாகும். அடுத்துவரும் போட்டிகளில் அணியில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். நடுவரிசையில் சிறிய தடுமாற்றம் நடந்துவிட்டது, விரைவில் இதை சரிசெய்து, வலிமையுடன் மீண்டு எழுவோம்.
சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி : படம் உதவி பிசிசிஐ ட்விட்டர்
14 ஓவர்கள் இருந்தபோது, 100 ரன்கள்வரைதான் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இந்த இலக்கு அடையக்கூடியதுதான். ஆனால், திடீரென விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தது கடினமானது. தொடக்கத்திலேயே 4 முதல் 5 விக்கெட்டுகள் மள மளவென சரிவதை எந்த அணியும் விரும்பாது.
இப்போது நாங்கள் நல்ல பாட்னர்ஷிப் கிடைக்காமல் தடுமாறுகிறோம். இதற்கு முன் இப்படி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது இல்லை. இந்த தொடரில் இரு முறை இதுபோல் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அடுத்த போட்டிகளில் இந்த தவறுகளை திருத்திக்கொள்வோம்.
நான் அடித்த சதம் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் முதல் பந்தை சந்தித்ததில் இருந்தே மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் விளையாடி வந்தேன். ஆனால், நான் ஆட்டமிழந்தவிதம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.