இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையல், நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனால், ஒருநாள் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.
இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், விளையாடிய ஆஸ்திரலிய அணி தோல்வியையே தழுவியது. 2-வது போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.
இந்த நிலையில், டி20 கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
கவுகாத்தியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் கோஹ்லி டி.20போட்டியில் முதன் முறையாக டக் அவுட் ஆனார். ரோகித், தவான், டோனி, மணிஷ்பாண்டே என முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இதனால் கூடுதல் கவனத்துடன் இன்று களம் இறங்க வேண்டி உள்ளது. மணிஷ் பாண்டேவுக்கு பதில் இன்று லோகேஷ் ராகுல், சஹாலுக்கு பதில் அக்ஷர் பட்டேல் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியா அணி உற்சாகத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 7 டி.20 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில், கவுகாத்தியில் வெற்றி வெற்றது தான் அதற்கு காரணம்.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பேரென்டோர்ப், 4 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர்களை மிரள செய்தார். ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் டி.20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலியா, டி20 தொடரை கைப்பற்ற கடுமையாக மல்லுக்கட்டும். அதே நேரத்தில், 2-வது போட்டியில் மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்கவுள்ளது. எனவே, இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழை மிரட்டல் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் டி.20 போட்டி இந்த மைதானத்தில் இதற்கு முன் சர்வதேச டி.20 போட்டி நடந்ததில்லை. இன்று தான் முதல் போட்டி நடக்கிறது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் நடந்துள்ளன. கவுகாத்தி மைதானம் போன்று இங்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கவுகாத்தியில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற பிறகு அந்த அணி வீரர்கள் பஸ்சில் ஓட்டலுக்கு திரும்பிய போது கற்கள் வீசப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று நடக்கும் 3-வது போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. துணை ராணுவப்படை உள்பட கூடுதலாக 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மைதானத்தை சுற்றி 56 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், ஹெல்மெட், லேப்-டாப், கேமரா ஆகியவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. வீரர்கள் செல்லும் பஸ்களுடன் சிறப்பு போலீஸ் பிரிவு படையினர் உடன் செல்கிறார்கள்.