வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
தொடரை இழந்துவிட்ட இந்திய அணி கடைசி டெஸ்டிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) இழக்கும் நிலையில் இருந்து தப்புவது என்பது மிகவும் சவாலானது.
வெற்றி பெற முடியா விட்டால் ‘டிரா’ செய்ய கடுமையாக போராட வேண்டும். அதுவும் கடினமானதே. தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா இதுவரை ஒயிட்வாஷ் ஆனது கிடையாது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வீரர்கள் முழு முயற்சியுடன் ஆட வேண்டும்.
தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் கேப்டன் வீராட்கோலியை தவிர எந்த ஒரு பேட்ஸ் மேனாலும் நிலைத்து ஆடமுடியவில்லை. பார்ட்னர்ஷிப் சரியாக இல்லாததால் தான் பேட்டிங் முழுமையாக சொதப்பிவிட்டது. பந்து வீச்சாளர்கள் கடந்த 2 டெஸ்டிலும் சிறப்பாக செயல்பட்டனர்.
2-வது டெஸ்டில் கோலியின் அணித் தேர்வு பல சர்ச்சைகளை உருவாக்கியது. காயம் காரணமாக சஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பெற்றார். தவனுக்குப் பதிலாக ராகுலும் புவனேஸ்வருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இடம்பெற்றார்கள். ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம்பிடித்தார். ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த மாற்றங்கள் கோலிக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் 3-வது டெஸ்டில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த டெஸ்டில் ரஹானேவும் புவனேஸ்வர் குமாரும் இடம்பிடிப்பார்கள் என்று தெரிகிறது. போட்டி நடக்கவுள்ள ஜொகன்னஸ்பர்க் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தைக் கொண்டுள்ளதால் இந்திய அணி பாண்டியா உள்பட 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. இதனால் அஸ்வின் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறியப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் பார்தீவ் படேலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு. இதனால் இந்திய அணியில் குறைந்தபட்சம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.
தென் ஆப்பிரிக்க அணி: ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, டுயன் ஆலிவியர், என்ஜிடி.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு பதிலாக ரகானே, புவனேஷ்வர்குமார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ ஆர்வத்துடன் உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ், கேப்டன் டுபெலிசிஸ், எல்கர், மர்கிராம் ஆகியோர் பந்துவீச்சில் பிலாண்டர், ரபடா, நிகிடி, மார்னே மார்கல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் 1 மற்றும் சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.