விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய முதல்நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களால் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. ரோகித் சர்மா 84 பந்தில் அரைசதம் அடித்தார்.

Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
இந்தியா மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. மயாங்க் அகர்வால் 114 பந்தில் அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.