தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் உதை வாங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த கங்குலி கூறியதாவது:
அயல்நாடுகளில் ரோஹித் சர்மாவின் ஆட்ட வரலாறும் தவண் ஆட்ட வரலாறும் நன்றாக இல்லை. உள்நாட்டில் இவர்களது சாதனைகளுக்கும் அயல்நாடுகளில் இவர்களது ரன்களுக்கும் உள்ள வேறுபாடு, வெண்ணைக்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வித்தியாசமாகும்.

ஆகவே விராட் கோலி, முரளி விஜய்யை நம்பியுள்ளது. புஜாராவை எடுத்துக் கொள்ளுங்கள் அவரது 14 சதங்களில் 13 சதங்கள் துணைக்கண்டங்களில் எடுக்கப்பட்டது. நான் ஏன் ராகுலை அடிக்கடி குறிப்பிடுகிறேன் என்றால் அவர் ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்துள்ளார், மே.இ.தீவுகள், இலங்கையிலும் ரன்கள் எடுத்துள்ளார். தோல்வி எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதற்காக நாம் பதற்றமடைய வேண்டிய தேவையுமில்லை. எனக்கு விராட் கோலி நிரம்ப மரியாத உள்ளது, அடுத்த போட்டியில் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
ரவிசாஸ்திரியும், விராட் கோலியும் நேரடியாக உடனேயே அணியை மாற்றிவிட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒன்று ரஹானே அல்லது ராகுல் இருவரில் ஒருவர் அணிக்குள் வருவார்கள். பேட்டிங்கில் இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். சென்சூரியன் பிட்சும் வேகமானதே. கேப்டவுனைக் காட்டிலும் அதிக பவுன்ஸ் இருக்கும்.
நான் பரிந்துரை செய்வதென்றால் ஷிகர் தவணுக்குப் பதில் ராகுல், மற்றும் 5 பவுலர்களைக் களமிறக்குவேன். ரோஹித் சர்மாவுக்கு இன்ன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். பேட்டிங்கில் ஒரு அரைசதம் கூட இல்லை. இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அடுத்த டெஸ்ட் போட்டியில் வலுவாக வர வேண்டும். தோல்வி மீது பெரிய விமர்சனங்கள் எதுவும் வரவில்லை, எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் எக்காரணத்தை முன்னிட்டும் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
இவ்வாறு கூறினார் கங்குலி.