விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணிக்கு ரோகித் சர்மாவுடன் இணைந்து, லோகேஷ் ராகுல் துவக்கம் தருவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. கடைசியாக இங்கு இந்திய அணி 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
இரண்டு ஆண்டுக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறது இந்தியா. ‘டுவென்டி–20’ தொடரில் மூன்றாவது துவக்க வீரராக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். காயத்தால் தவான் விலக, ரோகித்துடன் இணைந்து ராகுல் துவக்கம் தந்தார்.

Photo by Faheem Hussain / Sportzpics for BCCI
இவர் களமிறங்கிய 3 போட்டிகளில் 62, 11, 91 என மொத்தம் 164 ரன்கள் எடுத்தார். இதனால் நாளை துவங்கும் ஒருநாள் தொடரிலும் தவான் இல்லாத காரணத்தால், ராகுல் இந்திய அணிக்கு துவக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் ரோகித் அல்லது தவான் இல்லாத பட்சத்தில் ராகுல் இதுபோல ஒருநாள் அணிக்கு துவக்கம் தந்துள்ளார்.
அதேநேரம் ஒருநாள் அணிக்கு தவானுக்குப் பதில் துவக்க வீரராக டெஸ்ட், உள்ளூர் போட்டிகளில் அசத்திய வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், நாளை துவங்கும் போட்டியில் மயங்க் இடம் பெறுவது சந்தேகம் என்பதால், ராகுல் துவக்கத்தில் களமிறங்குவது உறுதியாகலாம்.
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, ஒருநாள் அணியில் இடத்தை தக்க வைக்க வேண்டும். ஏனெனில் ‘மிடில் ஆர்டரில்’ ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே உள்ளதால், துவக்கத்தில் நல்ல சராசரி (50.33 ரன்) வைத்துள்ள ராகுல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
இதனிடையே நாளைய போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். கோஹ்லி, ரோகித், புதியதாக இணைந்த மயங்க் அகர்வால் இதில் பங்கேற்றனர். அதேபோல விண்டீஸ் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.