முதல் டி20 கோப்பையை வென்று சாதனை படைக்குமா இந்திய படை? இன்று இறுதிப்போட்டி! 1

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்‌பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி நாளை களம்‌ காணவுள்ளது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள மகளிர் அணி கோப்பையுடன் தாயகம் திரும்பு‌மா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றுள்ளது.

image

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதல்முறையாக முன்னேறியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றுகளில் ஒரு போட்டியில் கூட தோல்வி காணாமல் ராஜநடையிட்டு அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்த வியூகங்கள் அமைத்து களமிறங்க காத்திருந்தது இந்திய அணி. ஆனால் போட்டி நடைபெறவிருந்த சிட்னி மைதானத்தில் விடாது மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. கைவிடப்படும் போட்டிகளுக்கு ரிசர்வ் டே என்பது இத்தொடரில் இல்லை என்பதால், லீக் சுற்றில் அதிக வெற்றிகள் பெற்ற அணி பெருமையுடன் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

 

image

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸின் இடையே மழை குறுக்கிடவே ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென்னாப்ரிக்காவுக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றிக்காக போராடிய தென்னாப்ரிக்க அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 6 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.

image

சொந்த மக்களின் ஆதரவு, நடப்பு சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பலம் சேர்க்கும் காரணிகளுடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும், அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பந்து அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

 

image

இந்திய அணியைப் பொறுத்தவரையில் லீக் போட்டியில் ஆஸ்திரேலியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. பூனம் யாதவின் சுழல், ஷிகா பாண்டேவின் துல்லியமான யார்க்கர்கள், மிரள வைக்கும் ஷஃபாலி சர்மாவின் அதிரடி, நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் ஹர்மன் ப்ரீத்தின் தலைமை என அனைத்திலும் சீரான பார்மில் உள்ளது இந்திய அணி.

image

ஆடவர் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வி என ஐசிசி கோப்பைகளை நெருங்கிச் சென்று தவறவிட்டுள்ளது இந்திய அணி. நடப்புத் தொடரில் அசத்தலான ஆட்டங்களால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்திய மகளிர் படை, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று, மகுடத்தை சூடுவதே சிறந்த மகளிர் தின பரிசாக இருக்கும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *