முதல் இன்னிங்சில் டேஜா அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா அணி.
நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் கவாஜா(1) மற்றும் வார்னர்(1) இருவரும் மூன்று ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, 2 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது ஆஸ்திரேலிய அணி.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஜானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அணியை சற்று சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. சரியாக 49 ரன்னில் இருந்தபோது, ஜடேஜாவின் மாயாஜால பந்தில் கேஎஸ் சிறப்பான ஸ்டம்பிங் செய்ய மாரனஸ் லபுச்சானே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த பந்தில் ரென்ஸா ரன் எடுக்காமல் அவுட் ஆக 109 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி திணறியது.
நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 37 ரன்களுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டம் இழந்தார். அலெக்ஸ் கேரி(36) மற்றும் பீட்டர் ஹான்ஸ்கோம்(31) ஆகிய இருவரும் சிறிது நேரம் நிலைத்து ஆடினர். ஆனாலும் அது நீடிக்க வில்லை.
கீழ் வரிசையில் இருந்த வீரர்களை அஸ்வின் அழகாக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்காக வேலையை முடித்துக் கொடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு, வந்த கடைசி இரண்டு வீரர்களின் விக்கெடுகளை அஸ்வின் வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.
சிறந்த கம்பேக் கொடுத்த ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.