கிறைஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா காயத்தால் விலகியுள்ளார்.
இசாந்த் சர்மாவின் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன
வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை இசாந்த் சர்மா வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் காயத்திலிருந்து திரும்பியபோதிலும், வழக்கமான தனது ஆவேசமான பவுன்ஸர்களையும், ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில் நேற்று வலைப்பயிற்சியில் இசாந்த் சர்மா ஈடுபட்டிருந்தபோது, அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஓய்வு எடுத்தார்.
ஆனால், இன்று இசாந்த் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை. அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் முழுமையாகக் குணமடையாததால்,அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ” இசாந்த் சர்மாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை, என்பதால், அவர் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட்போட்டியில் விளையாடமாட்டார்” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து பிசிசிஐ, அணிநிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது
இதனால் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இசாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ், அல்லது நவ்தீப் ஷைனி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்திய அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் நாளைய டெஸ்டை எதிர்கொள்வது மிகப்பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு அமையும்.