ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை நாகர்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் செயலர் சரவண சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:
ஐபிஎல் போட்டி நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிசிசிஐ சார்பில் “ஐபிஎல் ஃபேன் பார்க்’ நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு நாகர்கோவில் நடைபெறுகிறது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் 32 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது.
நாட்டின் தெற்கே நாகர்கோவில், வடக்கே வாராணசி, கிழக்கே ராஞ்சி, மேற்கே நாசிக் என 4 இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 ஆயிரம் பேர் ஆட்டத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என்று அவர்கள் தெரிவித்தனர்.