ஐபில் 2018, போட்டி 10: கொல்கத்தா vs ஐதராபாத் – போட்டி கணிப்பு

தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, சொந்த மண்ணில் வெற்றி பாதைக்கு செல்ல காத்திருக்கும். அதே போல் தொடர்ந்து இரண்டு போட்டிகளையும் வென்ற ஐதராபாத் அணி செம்ம பலத்துடன் காணப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்னுக்கு மேல் அடித்தும் தோல்வியை சந்தித்தது. தொடக்கவீரர்களான லின் மற்றும் நரைன் நல்ல பார்மில் இருக்க, நடுவரிசை வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால், பந்துவீச்சு தான் கொல்கத்தா அணியை ஏமாற்றிவிட்டது. கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்ட போது இரண்டு சிக்ஸர்களை வாரிக்கொடுத்த வினய் குமார், ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடுவதில் சந்தேகம் தான்.

இந்நிலையில், ஜூனியர் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் விளையாடியுள்ள கமலேஷ் நாகர்கோடி மற்றும் சிவம் மவி ஆகியோர் வினய் குமாருக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்கலாம்.

எதிர்பார்க்கும் அணி: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், டாம் கர்ரன், கமலேஷ் நாகர்கோடி, பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ்,

சன் ரைசர்ஸ் ஐதராபாத்:

டேவிட் வார்னர் இல்லையென்றாலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்த அணி பலமாகவே இருக்கிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஐதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கடைசி போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லையென்றாலும் அந்த அணி சிறப்பாகவே பந்து வீசியது. இதனால் அவருக்கு பதிலாக சந்தீப் சர்மா அணியில் இடம் பிடித்தார். ஒருவேளை, அவர் மீண்டும் அடுத்த போட்டிக்கு வந்தால், சந்தீப் சர்மா தான் மீண்டும் வெளியே உட்கார வேண்டும்.

எதிர்பார்க்கும் அணி: வ்ரிதிமான் சாஹா, ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், பில்லி ஸ்டான்லேக்

நேருக்கு நேர்:

இதுவரை 12 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி 8 வெற்றிகளையும், ஐதராபாத் அணி நான்கு வெற்றிகளையும் பெற்றுள்ளது.

எங்கு?

ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா

எப்போது?

ஏப்ரல் 14, 2018 – இரவு 8 மணிக்கு

போட்டி கணிப்பு:

ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் கை ஓங்கி இருந்தாலும், இந்த தொடரில் ஐதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே பலமாக இருப்பதால், சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.