நடுவர் நோ-பால் கொடுத்து விட்டு பிறகு நோ-பால் இல்லை என்று கூறியதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி களத்தில் இறங்கி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் தோனி நிதானமிழந்து செயல்பட்டதாகவும் அவர் நிச்சயம் விதியை மீறிவிட்டதாகவும் ஐசிசி முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
தோனியின் மிகப்பெரிய வலிமையே எந்த சூழ்நிலையிலும் அவர் நிதானமிழக்காமல் இருப்பதுதான், எனவேதான் அவர் களத்தில் இறங்கி நடுவர்களிடம் வாக்குவாதம் புரிந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் இதற்கு முன்பாக நடுவர் தீர்ப்பை மிகவும் பொறுமையாக அணுகி ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் உடையவராகத்தான் எனக்கு தோனியைத் தெரியும்.
ஆனால் ஐபிஎல் போட்டிகள் பணம் புழக்கம் உள்ள போட்டி, அதனால் ஏற்படும் அழுத்தம் ஆகியவை புரிகிறது. ஆனால் விளையாட்டில் இல்லாத வீரர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் களத்தில் இறங்கி மேட்சை நடத்தும் நடுவர்களிடம் வாக்குவாதம் புரிவது சரியானதல்ல. அதனால்தன தோனி தவறை ஒப்புக் கொண்டார்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை நடுவர்கள் தோனியிடன் விவாதித்திருக்க வேண்டிய அவசியமில்லை, அவருடன் பேச வேண்டிய அவசியமே நடுவர்களுக்கு இல்லை, அவர் களத்தில் இறங்கி வந்தவுடனேயே அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் தோனியுடன் அவர்கள் பேசியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. நடுவர்கள் தங்களைச் சுற்றி வீரர்கள் புடைசூழ்வதை தவிர்க்க வேண்டும்.
நோ-பால் விவகாரம் பவுலர் முனை நடுவருக்குரியது, ஸ்கொயர் லெக் நடுவர் அவருக்கு உதவிபுரிய வேண்டும், இதுதான் சரி. பவுலர் முனை நடுவர் தன் ஒரிஜினல் தீர்ப்புக்கு தன்னைத் தயார் படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் நோ-பால் நடுவருக்குரியதே. நடுவர் இதில் தவறு செய்திருந்தாலும் கூட பேட்டிங் கேப்டன் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைவது தவறாகும். ஆகவே இந்த விவகாரத்தில் தோனி எல்லை மீறிவிட்டார்.
தொழில் நுட்பம் துல்லியமானது அல்ல. ஹாட்ஸ்பாட் எப்போதும் அடையாளத்தைக் காட்டுவதில்லை. ரியல் டைம் ஸ்னிக்கோ மீட்டர் எட்ஜ்களை சில வேளைகளில் ஒழுங்காகக் காட்டுவதில்லை. பால் போகும் பாதையைக் கணிக்கும் ட்ராக்கர் உள்ளுக்குள்ளேயே பிழை உள்ளது. ஆகவே சிறந்த நடுவர்களும் கூட தவறிழைக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஆகவே நடுவர் துல்லியமாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்பது எதார்த்தத்திற்கு மாறான எதிர்பார்ப்பாகும். ஆகவே நமக்கு ஏற்புடைமை வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் சைமன் டாஃபல்.