சும்மாவே இருக்கும் சிவம் துபேவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவன் இது தான்
லக்னோ அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் தொடரை துவங்கியுள்ளது.
முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய சென்னை அணி, அடுத்ததாக 3ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது.
சென்னை – லக்னோ இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு தோனி மற்றும் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது இந்த போட்டி மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் தோல்வியடைந்தி்ருந்தாலும், தோனி அதே ஆடும் லெவனுடனே அடுத்த போட்டியையும் எதிர்கொள்வார் என தெரிகிறது.
துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டீவன் கான்வே ஆகியோரே இடம்பெறுவார்கள். மிடில் ஆர்டரில் மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இளம் ஆல் ரவுண்டரான சிவம் துபே பெரிதாக சோபிக்காவிட்டாலும், சென்னை அணி அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது, இதற்கு காரணம் அவரது உயரம் தான். உயரமே அவரது பெரும் பலமாக உள்ளது, அவரால் சில ஷாட்களை இலகுவாக அடிக்க முடியும் என்பதால், பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை அணி அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அடுத்த போட்டியிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்றே தெரிகிறது. அதே போல் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிட்செல் சாட்னர் ஆகியோரும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இடம்பெறுவார்கள்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த போட்டியை போன்றே இந்த போட்டியிலும் தீபக் சாஹர் மற்றும் ராஜவர்தன் ஹங்ரேக்கர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இம்பேக்ட் ப்ளேயர்களாக சிம்ரஜித் சிங், சேனாபதி, ஷேக் ரசீத், ரஹானே மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய துசார் தேஸ்பாண்டே இம்பாக்ட் ப்ளேயர் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்றே தெரிகிறது.
லக்னோ அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டீவன் கான்வே, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, பென் ஸ்டோக்ஸ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாட்னர், தீபக் சாஹர், ராஜவர்தன் ஹங்ரேக்கர்.