ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உத்தம் சி.ஜெயின், கெüதம்சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.1 கோடியே 35 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற நேமிசந்த், ஹிராகுமார், மகேந்திரசிங் ரங்கா ஆகியோர் அதில் ரூ.60 லட்சத்தினை, வழக்கை விசாரித்த கியூ பிரிவு ஐ.பி.எஸ்.,அதிகாரி சம்பத்குமாருக்கு வழங்கி உள்ளனர்.

Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI
இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதனை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 2015-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதனை எதிர்த்து சம்பத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரியான சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கு முன்பாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் முறையான முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் முன் அனுமதி பெறாமல் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவினை செய்துள்ளனர். எனவே இந்த குற்றச்சாட்டுப் பதிவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரம், இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகத்திடம் முறையாக அனுமதி பெற்று அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.